SOPA - இணையத்திருட்டு தடுப்பு சட்டம் - தமிழ் விளக்கம்



இலவசமாக தகவல்களை தொடர்ந்து வழங்கி தேடலை பூர்த்தி செய்யும் விக்கிபீடியாவின் SOPA(Stop Online piracy Act)சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நாமும் ஆதரவளிப்போம் .

SOPA வினை தமிழில் விரிவாக எழுதினால் "இணையத்திருட்டு தடுப்பு சட்டம்" என்று சொல்லலாம் .

பிறநாட்டு இணையத்தளங்கள் அமெரிக்காவின் காப்புரிமை சட்டத்தை மீறுமானால் அதனை அமெரிக்க மக்கள் பார்வையில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தான் இந்த சட்டத்தின் நோக்கம் .

தன்னுடைய தளத்தில் இருக்கும் தகவல்களை வேறு ஒரு இணையதளம் திருடி வெளியிட்டதாக ஒரு நிறுவனம் கருதினால் அந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி போலியான இணையத்தளத்தை முற்றாக முடக்குமாறு சர்வர் கம்பனிகளுக்கு ஆணையிட அனுமதி உண்டு எனக்கூறுகிறது இந்த சட்டம் .

உதாரணமாக : அமெரிக்க படைப்பில் உருவான திரைப்படம், பாடல் போன்றவற்றை வேறு ஒரு நாட்டில் இருக்கும் இணையத்தளம் வெளியிடுமேயானால் அந்த இணையத்தளம் அமெரிக்காவில் இருப்பவர்களால் பார்க்க முடியாத படி முற்றாக தடை செய்யப்படும் .

இந்த சட்டமூலத்தை கொண்டுவர வற்ப்புறுத்திய நிறுவனங்கள் ( National Music Publishers’ Association , Motion Pictures Association of America) பாடல் ,திரைத்துறை தொடர்புடையவை . இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலவச திரைப்படம் பாடல்கள் கூட நீங்கள் கேட்கமுடியாது .

***இதன் விளைவுகள் ***
காப்புரிமை என்ற போர்வையில் கொண்டுவரப்படும் இந்த சட்டம் கருத்துரிமையை அழிக்கும் .

மக்களின் ஊடகமாக இருக்கும் இணையம் தனிப்பட்ட நபர்களின் நிர்வாகம் ,ஆளுமைக்கு உட்படும் .

மக்கள் எந்த இணையத்தளங்களை பார்க்கலாம் .பார்க்ககூடாது என்பதை அமெரிக்க அரசும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் .

சமூக இணையத்தளங்களில் இருக்கும் எமது கருத்துரிமை போன்றவை கட்டுப்படுத்தப்படும்.

**விக்கிபீடியாவுக்கு என்ன பாதிப்பு ? ***
விக்கிபீடியா பல தளங்களை மூலமாக வைத்துக்கொண்டு ஆக்கங்களை எழுதி வருகிறது . விக்கிபீடியாவின் ஒவ்வொரு ஆக்கங்களுக்கும் கீழே வெளியிணைப்பு சுட்டிகள் உண்டு . இந்த சுட்டிகளில் உள்ள இணையத்தளங்களை(வேறு நாட்டு ) இந்த சட்டத்தால் முடக்கி விட முடியும் .

இதனால் பல வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு விக்கிபீடியா தள்ளப்படும் . இதனை எதிர்த்தே தனது தளத்தை இன்று (18-01-2011) இருட்டடிப்பு செய்திருக்கிறது விக்கிபீடியா .

இது அமெரிக்க தடுப்பு சட்டம் என்று நாம் இருந்து விட முடியாது . இது நிறைவேற்றப்பட்டால் ,இந்த சட்டத்தால் ஏற்கனவே ஈர்க்கப்பட்ட இந்தியா மற்றும் பல நாடுகளும் இதனை முன் உதாரணமாக எடுத்துகொண்டு நிறைவேற்ற முற்படும் . இலவசமாக எமக்கு கிடைப்பதும் எமது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் ஊடகமாகவும் இணையத்தளங்கள் தான் இருக்கின்றன.